ஹைதராபாத்,''வருமான வரித்துறையினரின் சோதனையின் போது, என் மகனை மத்திய ரிசர்வ் போலீசார் கடுமையாக தாக்கி காயப்படுத்தி விட்டனர்,'' என, தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் மல்லா ரெட்டி.
ஹைதராபாதில் உள்ள மல்லா ரெட்டியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், மல்லா ரெட்டி நேற்று கூறிய தாவது:
எங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது என் மகன் மகேந்தர் ரெட்டியை, அங்கு பாதுகாப்புக்கு இருந்த மத்திய ரிசர்வ் படையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். அன்று இரவு முழுதும் தாக்கி, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
என் மகனை பார்ப்பதற்கு எங்கள் குடும்பத்தினருக்கும், வழக்கறிஞருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.,வின் துாண்டுதலின்படியே பாதுகாப்பு படையினர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.