மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசார் மீது கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய சி.பி.ஐ.,மனு செய்ததில், ஆவணங்கள் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் பரிசீலித்து தகுந்த குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ைஸ போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர்.சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுக்கள் முருகன், சாமத்துரை, போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.
அவர்கள் மீது கொலை மற்றும் முறையற்று சிறையில் வைத்தல், சாட்சியத்தை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சி.பி.ஐ.,வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது 2 கட்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ.,தாக்கல் செய்தது.
உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ.,-ஏ.டி.எஸ்.பி.,தாக்கல் செய்த மனு: ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட சில சட்டப் பிரிவுகளில் கூடுதல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள், சாட்சிகளின் சாட்சியம் அடிப்படையில் போதிய ஆதாரங்கள் உள்ளன. கீழமை நீதிமன்றம் சரியாக பரிசீலிக்கவில்லை. விடுபட்ட கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யக்கோரிய மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ஏ.டி.எஸ்.பி.,மனு செய்தார்.
நீதிபதி ஜி.இளங்கோவன்: கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் சட்டத்திற்குட்பட்டு தேவையான தகுந்த குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து கீழமை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.