கூடலுார் : தோலில் ஏற்படும் வெண்படை நோயை குணமாக்க சித்தா டாக்டர் சிராஜுதீன் ஆலோசனை வழங்கினார்.
கூடலுார் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் 1990 19-91 ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் தோலில் வெண்படை நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் தலைமையில், சித்தா டாக்டர் சிராஜுதீன் ஆலோசனை வழங்கினார்.
அவர் கூறுகையில்: வெண்படை என்பது நோய் அல்ல. அது நிறமிகளின் குறைபாடுதான். இது பிறருக்குத் தொற்றாது. பரம்பரையாக வராது. இக்குறைபாடு உள்ளவர்கள் இரும்புச்சத்து, வைட்டமின் சத்து, தாது சத்துக்கள் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உடலில் வெயில் படும்படியாக வேலைகள் செய்ய வேண்டும். மன அழுத்தம், மனப்பதட்டம் இன்றி மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அதிக புளிப்புச் சுவையுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். புளி, எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை தவிர்க்க வேண்டும். அதிக இனிப்பு வகைகளை சாப்பிடக்கூடாது.
இதை குணப்படுத்துவதற்காக சித்த மருந்துகளான பரங்கிப்பட்டை மாத்திரைகள், லீவ் மாத்திரைகள் பெரோசித் கேப்சூல்கள், கருவேப்பிலை சூரணம் வழங்கப்படுகிறது. வெளி உபயோகத்திற்கு கார்போகி தைலம் உள்ளது. என்றார்.
இதனைத் தொடர்ந்து 1800 மாணவ மாணவிகளுக்கும், 80 ஆசிரியை ஆசிரியர்களுக்கும் அமுக்குரா மாத்திரைகள் வழங்கப்பட்டன. உதவித்தலைமை ஆசிரியர் முருகேசன், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.