சென்னை ''அறுவை சிகிச்சைகளை ஆய்வு செய்ய, சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களில் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அறுவைச் சிகிச்சை நடைமுறைகள் குறித்த கையேட்டை வெளியிட்ட பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
கருத்தரங்கில், பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது கையாளப்பட வேண்டிய விதிமுறைகள், உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு உள்ளது. இந்த கையேடு, ஒரு வாரத்தில் அனைத்து அறுவை சிகிச்சை டாக்டர்களுக்கும் கிடைக்கும்.
இறப்புகள் குறித்து தணிக்கை செய்ய, அந்தந்தஅரசு மருத்துவமனைகளில் தணிக்கை குழு செயல்படுகிறது. இந்த குழுக்களின் அறிக்கையை ஆராய்வது, விவாதத்திற்கு உள்ளாகும் அறுவை சிகிச்சைகளில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளை தனி கவனம் செலுத்தி ஆராய்வதற்கு, மண்டல தணிக்கை குழு ஏற்படுத்தப்பட உள்ளது.
![]()
|
ஒவ்வொரு குழுவிலும், அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ நிபுணர், மயக்கவியல் நிபுணர், எலும்பு சிகிச்சை நிபுணர் என, நான்கு உயர் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் இடம் பெறுவர். இவர்கள், இறப்புக்கான காரணங்களை கண்டறிந்து, அடுத்தமுறை அத்தவறு நடைபெறாமல் இருக்கவும், சிறப்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முறையை, மற்ற டாடக்டர்களும் பின்பற்ற அறிவுறுத்துவர்.
முதற்கட்டமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மண்டலங்களில் தணிக்கை குழு அமைக்கப்பட உள்ளது. வெளிநாடுகளில் மருத்துவம் படித்தோர், கட்டாய மருத்துவ சுழற்சி பயிற்சிக்காக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும்.
இதற்கான செயலாக்க கட்டணம், 3.54 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது, 25 ஆயிரம் ரூபாய் மற்றும், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., என்ற அடிப்படையில் குறைக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள் மேலும் செலுத்த வேண்டிய, இரண்டு லட்சம் ரூபாய் கட்டணத்தை, அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் இருந்து பிடித்தம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்களின் கட்டண சுமையை அரசு குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.