சென்னை : மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு வழங்குவதற்கான கணக்கீட்டை, நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப, யூனிட் அல்லது கட்டண முறையில் செயல்படுத்துமாறு, உதவி பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், வீடு உள்ளிட்ட கட்டடங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
அவற்றில், பகலில் மட்டும் மின்சாரம் கிடைக்கிறது. இரவு மற்றும் மழை காலங்களில், மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டியதாகிறது.
சூரியசக்தி மின்சாரத்தை உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம்.
இதற்காக மின் நிலையத்தில் உள்ள இணைப்புகளில், 'பைடைரக் ஷனல்' என்ற மீட்டர் பொருத்தப்படுகிறது. அதில், மின் வாரியத்திற்கு வழங்கிய மின்சாரம், மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்திய விபரங்கள் பதிவாகும்.
![]()
|
சூரியசக்தி மின் நிலையம் அமைத்திருப்பவர் மற்றும் மின் வாரியம் இடையிலான கணக்கீடு, 'நெட் பீட் இன்' எனப்படும் கட்டணம் முறையில் இருந்தது.
அதாவது, அதிக சூரியசக்தி மின்சாரத்தை மின் வாரியத்திற்கு வழங்கி, மின் வாரியத்தின் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தி இருக்கலாம். அப்போது, 1 யூனிட்டிற்கு, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள தொகையை மின் வாரியம் வழங்கும். இந்த முறையால் யூனிட்டிற்கு 3 ரூபாய் வரை கிடைத்தது.
கட்டண முறையால், 1 யூனிட்டிற்கு குறைந்த பணம் கிடைப்பதாகவும், மின் வாரியத்திற்கு அதிக கட்டணம் செலுத்துவதாகவும் பலரும் கருதினர். இதனால் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ஆர்வம் குறைந்தது.
இதையடுத்து, கட்டண கணக்கீட்டிற்கு பதில், 'நெட் மீட்டர்' எனப்படும் யூனிட் அடிப்படையில் மாற்றி கொள்ளும் வசதியை, இந்தாண்டில் துவக்கத்தில் மின் வாரியம் அமல்படுத்தியது.
இந்த முறையின் கீழ், சூரியசக்தி மின்சாரமும், மின் வாரியத்தின் மின்சாரமும் யூனிட் அடிப்படையில் கணக்கிடப்படும்.
அதாவது, தான் வழங்கிய சூரியசக்தி மின்சாரம் மற்றும் மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்தியது போக, மீதி உள்ள யூனிட்டிற்கு மட்டும், மின் வாரியத்திற்கு கட்டணம் செலுத்தினால் போதும்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்திருந்து வெளியூரில் வசிப்போர், யூனிட் அடிப்படையில் கணக்கிடுவதை அமல்படுத்துமாறு கோரினர்.
எனவே, சூரியசக்தி மின்சார கணக்கீட்டை நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப, 'நெட் மீட்டர்' அல்லது 'நெட் பீட் இன்' என, இரண்டு முறைகளையும் அமல்படுத்துமாறு ஆணையம் தெரிவித்தது.
அதற்கேற்ப செயல்படுத்துமாறு, பிரிவு அலுவலக உதவி பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.