ராமநாதபுரம் : கீழக்கரை அருகே மருதம் தோப்பு, மாவிலா தோப்பு, முனீஸ்வரம் ஆகிய குக்கிராமங்களுக்கு காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், இதுவரை குடிநீர் வரவில்லை. உடனடியாக வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கீழக்கரை தாலுகா தில்லையேந்தல் ஊராட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு காவிரி குடிநீர் வழங்குவதற்காக தெரு குழாய்கள், தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர். அவற்றில் இதுவரை தண்ணீர் வரவில்லை. குறிப்பாக மருதம் தோப்பு, மாவிலா தோப்பு, முனீஸ்வரம் பகுதி மக்கள் குடம் தண்ணீரை ரூ.10க்கு வாங்கி சிரமப்படுவதாக புகார் தெரிவித்து, ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி, துணை தலைவர் மனுசூக் பானு ஆகியோர் கிராம மக்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ேஷக் மன்சூர் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது, காவிரி குடிநீர் வராததால் 2 கி.மீ., நடந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மக்கள் பாதுகாப்பு கருதி குடிநீர் வசதி செய்தர வேண்டும்.
மேலும் ரோடு, தெருவிளக்கு வசதி இல்லை என மக்கள் கூறினர். கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும், என ேஷக் மன்சூர் கூறினார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.