சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கேக் விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு வகை இனிப்புகள் மிக்ஸர் பட்டர் முறுக்கு ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தது. இதன் வாயிலாக 160 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கேக் வகை தயாரித்து விற்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

'கப் கேக்' மட்டுமின்றி அரை கிலோ 1 கிலோ அளவிலான கேக்குகளும் விற்கப்பட உள்ளது. 'வெண்ணிலா பட்டர்காட்ச் சாக்லேட் மேங்கோ ஆரஞ்ச்' உள்ளிட்ட சுவைகளில் கேக்குகள்; ஆவின் குல்பியை பயன்படுத்தி சிறப்பு கேக் தயாரித்தும் விற்கப்பட உள்ளது. இதற்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
அரசின் அனுமதி கிடைத்ததும் கேக் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். மலிவு விலையில் தண்ணீர் பாட்டில்கள் தயாரித்து விற்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. அதுபோல கேக் தயாரிப்பு திட்டமும் செயல்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.