மரக்காணம்: கோட்டகுப்பம் நகராட்சியில் நாய் பிடித்து கருத்தடை செய்ய பேரம் பேசும் 'ஆடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளன. கோட்டக்குப்பம் நகராட்சி டிரைவர் ஒருவர் தனியார் கால்நடை பராமரிப்பு அறக்கட்டளை நிர்வாகியிடம் மொபைல் போனில் நாய்க்கு கருத்தடை செய்ய பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் 'நாய்களைப் பிடித்து கணக்கிற்காக சில நாய்களுக்கு கருத்தடை செய்துவிட்டு மற்ற நாய்களை கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். 'இதற்கான பணம் எவ்வளவு என்று கூறுங்கள். நகராட்சியின் 'செக்' கொடுத்து விடுகிறோம். அதில் நாம் பங்கு போட்டுக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.