கடலுார்-கடலுார் சி.கே. கல்விக் குழும பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற்ற 905 மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டனர்.
கடலுார் சி.கே. கல்விக் குழுமம் சார்பில், 2022ம் ஆண்டின் பட்டமளிப்பு விழா, புதுச்சேரி சங்கமித்ரா மாநாட்டு மையத்தில் நடந்தது.
சி.கே. கல்விக் குழுவின் தலைவரும், கவின்கேர் நிர்வாக இயக்குனருமான ரங்கநாதன், சி.கே. கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அமுதவல்லி ரங்கநாதன் தலைமை தாங்கினர்.
டான்பாக் தொழில்துறை நிர்வாக இயக்குநர் செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார்.
விழாவில் 625 பொறியியல் பட்டதாரிகள், 130 எம்.பி.ஏ., பட்டதாரிகள், 150 பி.எட்., பட்டதாரிகள் என, மொத்தம் 905 மாணவ, மாணவியருக்கு பட்டங்களும், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடங்களை பிடித்த 6மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
சி.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் சரவணன், சி.கே. கல்வியியல் கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு, ஆசிரியர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர் செந்தில்நாதன் பேசுகையில், 'நாடு இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளது. நாம் இன்று பிரகாசிக்கவும் எதிர்காலத்தில் நிலைத்திருப்பதும் உங்கள் கையில் உள்ளது என, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பட்டம் பெற்ற மாணவர்களை கல்விக்குழும நிர்வாக இயக்குனர் ரங்கநாதன் மற்றும் அமுதவல்லி ரங்கநாதன் பாராட்டி பேசினர். அப்போது, 'சி.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சர்வதேச தரத்துடன் தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 'நாக்' அங்கீகாரம் பெற்ற இக்கல்வி குழுமத்தில் 6 இளநிலை படிப்பு, இரண்டு முதுகலை படிப்பு வழங்கப்படுகிறது.
இரண்டாண்டு பி.எட்., படிப்பை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என, தெரிவித்தனர்.