வடலுார்,--'கட்சி தொண்டர்களை மதிக்க வேண்டும்' என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், வடலுார் தனியார் மண்டபத்தில் நடந்தது. அவை தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். பொருளாளர் கதிரவன், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், புகழேந்தி, சண்முகம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பன்னீர்செல்வம் பேசியதாவது:
மாவட்ட தி.மு.க.,வில் புதியதாக பல நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். சரியாக பணியாற்றாவிட்டால் 6 மாதத்தில் நிச்சயம் மாற்றப்படுவார்கள். கட்சியில் எப்பொழுதும் உழைத்தவர்களுக்கு தகுந்த மரியாதை உண்டு.
தொண்டர்களை மதிக்க வேண்டும். அவர்களை மதித்ததால்தான் இன்று நான் எம்.எல்.ஏ., அமைச்சராக இருக்கிறேன் . இன்னும் ஒரு ஆண்டில் லோக்சபா தேர்தல் வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதியிலும் தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமுத்து, சக்திவேல், சுதா சம்பத், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், நாராயணசாமி, நகர செயலாளர்கள் ராஜா, தமிழ்ச்செல்வன், வடலூர் சேர்மன் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன், செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.