நாமக்கல் : ''உற்பத்தி செய்யப்பட்ட, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள துண்டுகள் விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன. அவற்றை, தமிழக அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசாக, ரேஷன் கார்டுதாரருக்கு தலா, இரண்டு துண்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, வெண்ணந்துார் விசைத்தறி சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம், நாமக்கல் மாவட்டங்களில், விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இத்தொழில், கடந்த சில ஆண்டாக, பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஏற்றுமதி ஜவுளி ஆர்டர் குறைந்த நிலையில், நவீன விசைத்தறியாளர்கள், துண்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக, துண்டு உற்பத்தி அபரிமிதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், துண்டு விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளது. நாமக்கல், சேலம் மாவட்டத்தில் மட்டும், 300 கோடி ரூபாய் அளவுக்கு, ஜவுளி தேக்கமடைந்துள்ளது. அதன் காரணமாக, தொடர்ந்து, விசைத்தறி தொழிலை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இரண்டு துண்டுகள் வழங்கவும், உற்பத்தி செய்யப்பட்ட துண்டுகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அதன் மூலம், நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.