கோவை: கோவையில் 4.5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் மற்றும் சிறப்பு சுற்றுக்காவல் படைக் குழுவினர், கண்ணம்பாளையம் கலங்கல் ரோடு மீன் பண்ணை தோட்டத்தில் ஆய்வு செய்தனர். அங்குள்ள குடோன் ஒன்றில், தலா 50 கிலோ எடையுள்ள, 90 மூட்டைகளில் 4.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்டம் சின்னபொதிக்குளத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரை, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், மாரிமுத்து, கண்ணம்பாளையம் சுற்றுப்பகுதி மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவுக்கு கடத்தி விற்பனை செய்வது தெரியவந்தது. ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதில் தொடர்புடைய நால்வரை தேடி வருகின்றனர்.