குன்னூர் : குன்னூர் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பாதுகாப்பு செக்யூரிட்டி பிரிவில் ஏற்பட்ட விபத்து காரணமாக இருவர் படுகாயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், ராணுவத்திற்கு தேவையான வெடி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 19ம் தேதி அதிகாலையில் தொழிற்சாலையில் உள்ள கார்டைட் டிவிஷன் பிரிவில் பலத்த சப்தத்துடன் வெடி விபத்து நடந்தது.
அதில் இருவர் காயமடைந்தனர். இந்த வெடி விபத்து அருவங்காடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், 5 நாட்களுக்குள் இன்று காலை 10:45 மணியளவில் மீண்டும் வெடி சப்தம் கேட்டது.
இதில், பாதுகாப்பு பிரிவில், வெல்டிங் வைத்த போது ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு, தொழிற்சாலை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் சிறிது நேரம் ஊட்டி - குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.