திருப்பூர்: மொபைல் போனில் வாக்குவாதம் மற்றும் ஆபாசமாக பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க, திருப்பூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு, சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் விசாரணை கமிட்டி முன் ஆஜராகினர்.
பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் மொபைல் போனில் பேசினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே இது தொடர்பாக, இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பா.ஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்காக விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அதன்படி திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்சி மற்றும் திருச்சி சூர்யா ஆகியவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது. இந்த விசாரணை அறிக்கை தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணை கமிட்டியினர் தெரிவித்தனர். மேலும், உட்கட்சி தொடர்பானது என்பதால் மற்ற தகவல்கள் தெரியவில்லை.