பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, வசந்தநகர் பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் மிகவும் பழமை வாய்ந்த, நாக மகா தீர்த்த சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு, தினமும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். நேற்று, கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
'மனநோயாளிகளுக்கு அன்பும், ஆதரவும் தேவை'
நாமக்கல்: ''மனநோய்க்கு மருந்துண்டு. மனநோயாளிக்கு உங்களின் அன்பும், ஆதரவும் தேவைப்படுகிறது,'' என, நாமக்கல் மாவட்ட மனநல மருத்துவர் ஜெயந்தி பேசினார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், மாவட்ட மனநல திட்டத்தில், மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்ட மனநல மருத்துவர் ஜெயந்தி பேசியதாவது: மனநலம் நன்றாக இருக்கும்போதுதான், நமது செயல், சிந்தனை மற்றும் புரிந்துகொள்ளும் திறன் சரியாக அமையும். மனநலம் பாதிக்கப்படும்போது, அவர்களின் செயல், சிந்தனைகள், நடந்து கொள்ளும் விதம் மாறுபடும். மக்கள் அவற்றை, மனநல நோய் என அறியாமல், பேய்பிடித்திருப்பதாக கருதி, செய்வினை, மாந்தரீகம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.
குணம் மாற்றம், பேய்பிடித்தல் போல ஆடுவது, சம்மந்தமில்லாமல் பேசுவது, மற்றவர்கள் அருகில் இருக்கும் போது அவர்களின் கவனத்தை கவர்வதற்கான அதிக வேகத்துடன் காணப்படுவர். இதுவும், மனநல நோயில் ஒரு வகை. இந்நோய்க்கு சிறந்த சிகிச்சை முறை, உங்களின் அன்பும், ஆதரவும் தான். மனநோய் மருத்துவர் ஆலோசனைப்படி அவர் கூறும் காலத்துக்கு, தடையில்லாமல் மருந்து அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.