ஊட்டி:நீலகிரி கலெக்டருக்கு செல்போன் குறுந்தகவல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட கலெக்டராக அம்ரித் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 26-ம் தேதி மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் நீலகிரி மாவட்ட கலெக்டரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையொட்டி அன்றைய தினம் விடிய விடிய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், செல்போன் மிரட்டல் விடுத்த எண்ணை கொண்டு அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக மிரட்டல் விடுத்தார் என்று சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படை போலீசார் திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மிரட்டல் விடுத்த ஆசாமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஊட்டி பி 1 இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார் தஞ்சாவூர் சென்று அவரை பிடித்தனர்.
விசாரணையில் அவர் டெல்லியை சேர்ந்த நிதின் சர்மா , 40, தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, எதற்காக மிரட்டல் விடுத்தார் இவருக்கு வேறு ஏதாவது அசம்பாவித சம்பவங்கள், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் மணி குமார் கூறுகையில், நிதின் சர்மா செல்போன்களை திருடும் பழக்கம் உடையவர். அவ்வாறு திருடப்படும் செல்போன்கள் மூலம் பலருக்கும் மிரட்டல் விடுத்து வந்ததும், நீலகிரி கலெக்டருக்கு மிரட்டல் விடுத்ததும் திருட்டு செல்போன் என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்றார்