சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இவர்களாவது... தமிழை வளர்ப்பதாவது!

Added : நவ 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பேராசிரியர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ண சாஸ்திரி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ் வாழ்க! தமிழ் வளர்ப்போம்! ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம்!' என்று, தமிழுக்கான ஏகபோக உரிமையாளர்களாக தங்களைத் தாங்களே பறைசாற்றிக் கொள்ளும் திராவிட செம்மல்கள், தங்களின் பிள்ளைகளை படிக்க வைப்பதோ, ஆங்கில வழி கல்வியில் தான். அவர்களின் மகன்களும், மகள்களும் ஹிந்தி மொழியை கற்பதற்கு

பேராசிரியர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ண சாஸ்திரி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ் வாழ்க! தமிழ் வளர்ப்போம்! ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம்!' என்று, தமிழுக்கான ஏகபோக உரிமையாளர்களாக தங்களைத் தாங்களே பறைசாற்றிக் கொள்ளும் திராவிட செம்மல்கள், தங்களின் பிள்ளைகளை படிக்க வைப்பதோ, ஆங்கில வழி கல்வியில் தான். அவர்களின் மகன்களும், மகள்களும் ஹிந்தி மொழியை கற்பதற்கு எந்தவிதமான தடையுமில்லை.

கடந்த, ௨௦௧௯ லோக்சபா தேர்தல் நேரத்தில், தமிழகத்தின் தற்போதைய நீர்வளத் துறை அமைச்சரான துரைமுருகன், வேலுார் தொகுதியில் போட்டியிட, தன் மகன் கதிர் ஆனந்துக்கு, 'சீட்' கேட்டு போராடிப் பெற்றார். அதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?

'என் மகன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில், லோக்சபாவில் சரளமாகப் பேசுவான்' என்பது தான். ஹிந்தியையே தாய் மொழியாகக் கொண்ட பலர் இருக்கும் லோக்சபாவில், அவ்வாறு பேச முடியுமானால், அவரின் மகனுக்கு எந்த அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்?

அதே சமயம் சாமானியன் ஒருவன், ஹிந்தி மொழியை கற்றுக்கொண்டு விட்டால், அவன் வளர்ந்து விடுவானே என்று, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். அத்துடன், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தலைவர்களான பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர், இங்கு ஹிந்தியில் உரையாற்றினால், தமிழக மக்கள் தெள்ளத்தெளிவாக அதை புரிந்து கொண்டு விடுவர்.

அப்படி நடந்தால், நம்முடைய பித்தலாட்டங்கள், சுலபமாக வெளிச்சத்திற்கு வந்து விடும். அதன்பின் தங்களின் ஆட்டம் குளோஸ் ஆகி விடும் என்றும் அஞ்சுகின்றனர். அதேநேரத்தில், 'தமிழ்... தமிழ்...' என வார்த்தைக்கு வார்த்தை பேசுவதால் மட்டும், இவர்கள் பெரிய்ய தமிழ்ப் புலவர்களா என்ன... அது தான் இல்லை!

அய்யம்பெருமாள் கோனார், வாரியார் சுவாமிகள், ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராஜனார், பண்டித மணி கதிரேசன் செட்டியார், அவ்வை துரைசாமி பிள்ளை, ம.பொ.சிவஞானம் போன்ற சான்றோர் தமிழுக்குச் செய்யாத தொண்டையா, திராவிட செம்மல்கள் செய்து விட்டனர்.

'பொதிகை' தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை காலை, 9:௦௦ மற்றும் இரவு, 11:௦௦ மணிக்கு, 'தமிழ்த் தேன் சுவைத்தேன்' என்ற அருமையான தமிழ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உண்மையிலேயே தமிழின் மீது பற்றும், அதை வளர்க்கும் ஆர்வமும் இருந்தால், முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல்களில், ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்களின் உதவியுடன், தினமும் சங்க இலக்கியங்கள் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்த ஆவன செய்யலாமே! ஆனால், அப்படி, செய்ய மாட்டார்கள்.

ஏனெனில் இவர்கள், சந்தர்ப்பவாத தமிழ் வியாபாரிகள். இவர்கள் நடத்தும் சேனல்களிலேயே, செய்தி வாசிப்பாளர்கள் பலருக்கு, ல, ழ, ள போன்றவற்றை உச்சரிக்க திராணி இல்லை. இவர்களாவது தமிழை வளர்ப்பதாவது... எல்லாம் வேஷம்!
மருத்துவர்களே அலட்சியம் காட்டாதீங்க!அ.அப்பர்சுந்தரம், மயிலாடு துறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஏழை மக்களின் மருத்துவ தேவைகளை, அரசு மருத்துவமனைகளே பூர்த்தி செய்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ௭௦ சதவீத மக்கள், அரசு மருத்துவமனைகளையே நம்பியே உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றி வரும், நுாற்றுக்கணக்கான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில், ஒரு சிலர் செய்யும் தவறுகளால், ஒட்டு மொத்த மருத்துவத் துறைக்கே களங்கம் ஏற்படுவது வேதனை அளிக்கிறது.

குறிப்பாக, வெண்மை நிற வேஷ்டியில், ஒரு கரும்புள்ளி இருந்தால், அதுதான் மற்றவர்களின் கண்ணுக்கு தெரியும் என்பர். அதுபோல ஒரு மருத்துவர் தவறு செய்தாலும், ஒட்டுமொத்த மருத்துவத் துறையே தவறிழைத்தது போல சித்தரிக்கப்படுவது ஏற்புடையதல்ல.

இரண்டு டாக்டர்களின் கவனக்குறைவான சிகிச்சையால், சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியா, மரணம் அடைந்தது, ஈடுசெய்ய முடியாத இழப்பு தான். இந்த சம்பவத்தை மற்ற டாக்டர்களும், மருத்துவ துறையில் பணியாற்றுவோரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், நோயாளிகள் விஷயத்தில், உச்சபட்ச கவனம் செலுத்தி, மருத்துவம் செய்திட முன்வர வேண்டும். கவனக்குறைவோ, அலட்சியமோ இருக்கவே கூடாத துறை என்றால், அது மருத்துவதுறை தான்.

டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும், பல்வேறு நெருக்கடிகள், அதிக நேர உழைப்பு, ஓய்வின்மை, நோயாளிகளின் ஒத்துழையாமை, புற அழுத்தம் போன்றவற்றால் சோர்வும், அலட்சியமும் ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்றாலும், முடிந்த வரை அவற்றை சமாளித்து, வெற்றிகரமான பணியை மேற்கொள்ள முற்பட வேண்டும்.

பணிச்சுமையோ, மன அழுத்தமோ ஏற்படுகிற போது, மாற்று ஏற்பாடு செய்து விட்டு, ஓய்வெடுக்க செல்வது தவறல்ல. இதை பின்பற்றினால், எதிர்காலத்தில் டாக்டர்களின் அலட்சியத்தால் மரணம் என்ற செய்தியே வராது என்பது உறுதி!




தி.மு.க., வெற்றி கானல் நீர் தான்!ச.பா.சங்கரநாராயணன், சென்னையில் இருந்து எழுது கிறார்: தமிழகத்தில், ௨௦௧௪ லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., கூட்டணி, இரு இடங்களிலும், தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க., 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடைந்தது.அப்போது, அ.தி.மு.க.,வை பற்றி தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, 'திருமணம் நடந்து விட்டது; முதலிரவு நடக்கவில்லை' என்று கிண்டலடித்தார்.

அதாவது, 37 எம்.பி.,க் கள் இருந்தாலும், அ.தி.மு.க.,வினரால் எதையும் சாதிக்க முடியாது என்ற கோணத்தில் பேசினார்.

பின், 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி தமிழகத்தில், 38 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தை அ.தி.மு.க., பிடித்தது.

இதில், தி.மு.க., மட்டும் போட்டியிட்ட, 20 இடங்களிலும் வென்றும், எந்த வித பயனும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், ௨௦௨௪ லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., ௩௦ இடங்களில் போட்டியிடவும், மீதமுள்ள, ௧௦ இடங்களை மட்டும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் தீர்மானித்து உள்ளதாக, சமீபத்தில் செய்தி வெளியானது.

தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய முதல்வர், கட்சியினரின் செயல்பாடுகளால் தான் துாக்கமின்றி தவிப்பதாகவும் தெரிவித்தார். இதைப் பார்க்கும் போது, தி.மு.க.,வினரின் அடாவடி பேச்சுக்களும், அட்டகாசங்களும் தொடருமே அன்றி, முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.

இந்த லட்சணத்தில், ௨௦௧௯ லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க.,வுக்கு கிடைத்த ஆதரவு, ௨௦௨௪ தேர்தலிலும் தங்களுக்கு கிடைக்கும் என்று, அவர் நம்புவது வேடிக்கையாக உள்ளது.

தவறு செய்யும் கட்சியினருக்கு எதிராக, சாட்டையை சுழற்றாமல், ஸ்டாலின் அலட்சியம் காட்டுவது தொடர்ந்தால், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றி கானல் நீர் தான்!




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
26-நவ-202200:10:19 IST Report Abuse
Anantharaman Srinivasan நான் ஆணையிட்டால் அது நடக்காவிட்டால் என்று ஆளுமையுடன் ஸ்டாலினால் சாட்டையை சுழற்ற முடியாது.. ஸ்டாலின் திண்ணையை பிடித்து நடக்கும் போது இன்றைக்கு கட்சியிலிருக்கும் பெரிய தலைகள் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்தவர்கள்.
Rate this:
Cancel
சோழநாடன் - Tiruchirappalli,இந்தியா
25-நவ-202218:16:52 IST Report Abuse
சோழநாடன் திராவிட கட்சிகள் குறிப்பாக கலைஞர், ஸ்டாலின் தமிழை வளர்க்கவில்லை. சரி. பாஜகவின் ஒன்றிய அரசு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிக்கு 20 கோடி மட்டும் ஒதுக்குகின்றது. இவர்களும் தமிழை வளர்க்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-நவ-202206:39:24 IST Report Abuse
D.Ambujavalli நாங்களெல்லாம் 'வீசியெறிந்த' கோடிகளால்தான் கட்சி வென்று ஆட்சி அமைந்தது நாங்கள் எதற்கு அடங்கிப்போக வேண்டும்? எங்களது துறைகளின் சகல 'சி' களிலும் பங்கு வாங்கிக்கொண்டு இவர் எப்படி எங்களை அடக்கலாம்' என்று அவர்கள் 'நிமிர்ந்து' விட்டனர். முதல்வர் சாட்டை, சவுக்கு எதையும் எடுக்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X