சென்னை:'இன்று இரவுக்குள், 'நெட் பேங்கிங் அக்கவுன்ட்' காலாவதியாகப் போகிறது' எனக் கூறி, 'லிங்க்' அனுப்பி, பண மோசடியில் ஈடுபடும் 'சைபர் கிரைம்' குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு அறிவுறுத்திஉள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள, 'வீடியோ' பதிவு:
தற்போது, சைபர் கிரைம் குற்றவாளிகள், 'நெட் பேங்கிங்' பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்களின் மொபைல் போன் எண்களுக்கு, 'உங்கள் நெட் பேங்கிங் கணக்கை 'அப்டேட்' செய்ய வேண்டும். தவறினால், இன்று இரவுக்குள், உங்கள் நெட் பேங்கிங் அக்கவுன்ட் காலாவதியாகி விடும்' என, குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.
இதில், 'லிங்க்' அனுப்பி, வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்., கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு உள்ளிட்டவற்றை பெற்று விடுகின்றனர். பின், ஓ.டி.பி., எண்களை பெற்று, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கிகளில் இருந்து, பொதுமக்களுக்கு எவ்வித இணையதள இணைப்பும் அனுப்புவது இல்லை. சைபர் கிரைம் குற்றவாளிடம் ஏமாற வேண்டாம்; எச்சரிக்கையாக இருங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.