பழவேற்காடு மீனவர்கள் வருவாய் அதிகரிக்க... திட்டம்!:6 மாதங்கள் தொழிலின்றி முடங்குவதால் ஏற்பாடு

Added : நவ 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பழவேற்காடு:பழவேற்காடு மீனவர்கள், ஆண்டில் ஆறு மாதங்கள் வேலையின்றி வீட்டில் முடங்குவதால், அவர்களது வருவாய் அதிகரிக்க, மீன்வளத் துறை திட்டம் வகுத்துள்ளது.பழவேற்காடு மீனவ பகுதியில், 46 கிராமங்களைச் சேர்ந்த, 30 ஆயிரம் மீனவர்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். பழவேற்காடு முதல், எண்ணுார் வரை, 2,200 பைபர் படகுகள் மீன்பிடி தொழிலுக்கு
பழவேற்காடு மீனவர்கள் வருவாய் அதிகரிக்க... திட்டம்!:6 மாதங்கள் தொழிலின்றி முடங்குவதால் ஏற்பாடு

பழவேற்காடு:பழவேற்காடு மீனவர்கள், ஆண்டில் ஆறு மாதங்கள் வேலையின்றி வீட்டில் முடங்குவதால், அவர்களது வருவாய் அதிகரிக்க, மீன்வளத் துறை திட்டம் வகுத்துள்ளது.

பழவேற்காடு மீனவ பகுதியில், 46 கிராமங்களைச் சேர்ந்த, 30 ஆயிரம் மீனவர்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

பழவேற்காடு முதல், எண்ணுார் வரை, 2,200 பைபர் படகுகள் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

தினமும், 10 - 15 கடல் மைல் தொலைவிற்கு தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில், மத்தி, கவலை, அயிலா, வஞ்சிரம், பாறை, சூறை, கிழங்கான், வவ்வால் என பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கும்.

நள்ளிரவிலும், அதிகாலையிலும் கடலுக்கு செல்லும் மீனவர்கள், பிடித்துவரும் மீன்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய்தான் அவர்களது வாழ்வாதாரம்.

கடந்த ஏப்ரல், மே, ஆகஸ்ட் மாதங்களில கடலின் நீரோட்ட திசை மாற்றத்தால் தொழில் பாதிப்பில் இருந்து வந்தனர்.

தொழிலுக்கு சென்றவர்களுக்கு குறைந்த அளவே மீன்கள் கிடைத்தது, அவை டீசலுக்கு கட்டுபடியாகாத நிலையில் தொழிலுக்கு செல்வதையே தவிர்த்தனர்.

தொடர்ந்து, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மீண்டும் தொழிலுக்கு சென்று வந்தனர். குறைந்த அளவே மீன்கள் கிடைத்தாலும் குடும்ப செலவினங்களை எண்ணி, வேறு வழியின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவ மழை துவங்கியது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தொடர்ந்து உருவாகி கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், மீன்வளத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, கடந்த, 24 நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

மீன்பிடி படகுகள், வலைகள் கரைகளில் பணியின்றி ஒய்வெடுத்து வருகின்றன. மீன்பிடி வலைகளை பின்னுவது, படகுகளை பழுது நீக்குவது, புதுப்பிப்பது என உள்ளனர்.


பாதிப்புமீன்பிடி தடைகாலம், மீன்வரத்து இல்லாமை, பருவநிலை மாற்றம், பருவமழை, புயல், சூறைகாற்று, பனிப்பொழிவு என ஒவ்வொரு ஆண்டும், ஆறு மாதங்கள் தொழிலின்றி மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

பழவேற்காடு பகுதியில் கிடைக்கும் மத்தி, கவளை, கானாங்கெளுத்தி, சூறை, பாறை உள்ளிட்ட மீன்கள் கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

வெள்ளை இறால், செமக்கை இறால், உள்ளிட்டவைகளை பகுதிகளில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் அவற்றை வாங்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தனர்.

ஆண்டுக்கு, ஆறு மாதங்கள் மீன்பிடி தொழில் பாதிப்பதால், மொத்த வியாபாரிகளும் பெரும் வருவாய் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

வருவாய் இல்லாத சூழலில் குடும்ப செலவினங்களுக்காக நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் வாழ்வாதாரம் காக்கின்றனர்.

வருவாய் இழப்பு தொடரும் சூழலில் பழவேற்காடு மீனவ குடும்பங்களின் அடுத்த தலைமுறையினரில் சிலர், காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் தினக்கூலிகளாக வேலைக்கு செல்ல துவங்கிவிட்டனர்.

தொழில் நிறுவனங்களில் இவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளும் கிடைக்க வாய்ப்பின்றி கிடக்கிறது.

குடும்ப செலவினங்களுக்காக வேறுவழியின்றி கிடைக்கும் வேலைகளை செய்து அன்றாடம் குறைந்த வருவாய் ஈட்டுகின்றனர்.


விலக மனமில்லைகடல்தான் தங்களது வாழ்வாதாரம் என கருதி வாழும் பெரும்பாலானவர்கள் தொழிலை விட்டு விலக மனமின்றி, கிடைக்கும்போது வருவாய் ஈட்டுவதும், கிடைக்காத நிலையில், முடங்கி கிடப்பதுமாக உள்ளனர்.

மாற்று தொழிலுக்கு சென்றால், மீன்பிடி தொழிலே முற்றிலும் மறந்துவிடும் என்பதால், அதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

வருவாய் ஈட்டுவது, கடனை அடைப்பது, தொழில் இல்லாதபோது கடன் வாங்குவது என சுழற்சி வாழ்க்கையை வாழ்கின்றனர். சேமிப்பு என்பதே இவர்களிடம் இல்லை.

இயற்கை சூழல்களின்போது, பழவேற்காடு மீனவர்கள் வாழ்வாதாரம் காக்கவும், ஆண்டு முழுதும் அவர்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கும் அரசு வழிவகை செய்ய வேண்டும் என மீனவ மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


மாற்றுத்தொழிலுக்கு பயிற்சி


தடைகால நிவாரணம், மழைக்கால நிவாரணம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இயற்கை சூழல்கள், கடல்மாசு உள்ளிட்டவற்றால் கடலில் மீன்வளம் குறைந்து, மீனவர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. மீன்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடலில் செயற்கை பவளப்பாறைகள் போட்டு அதில் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது. மீனவர்கள் பெரும்பாலும், மாற்றுத்தொழிலுக்கு செல்ல விரும்புவதில்லை. ஒரு சிலர் பணிக்கு செல்கின்றனர். மதிப்பு கூட்டிய கடல் உணவுப்பொருட்களை தயாரிப்பது, அதனை சந்தைப்படுத்துவது தொடர்பாக மகளிருக்கு பயிற்சிகள் அளிக்கவும், ஆண்களுக்கு கடலில் மீன் வளர்ப்பு தொழிலுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

மீன்வளத்துறை அதிகாரி, பொன்னேரி.


கடனில் ஓடுது வாழ்க்கை


கடந்த 20 நாட்களாக தொடர்ந்து, வருவாய் இன்றி இருக்கிறோம். மாற்று தொழிலுக்கு செல்ல வாய்ப்பில்லாததால், அன்றாட செலவினங்களுக்கு, கடன் வாங்கி செலவிட வேண்டிய நிலையில் உள்ளோம். தினமும், கரையில் நிற்கும் படகுகளையும், வலைகளையும் பார்த்துவிட்டு வருவதுதான் வேலையாக உள்ளது.


ஆண்டிற்கு,6 மாதங்கள் இதே நிலையில் தான் வாழ்கிறோம். அரசு வழங்கும் மழைக்கால நிவாரணம், போதுமானதாக இருப்பதில்லை. ஒவ்வொரு குடும்பமும் கடனில்தான் வாழ்க்கையை நகர்த்துகிறது. மழைக்கால நிவாரண தொகையை உயர்த்தி தரவேண்டும். டீசல், இன்ஜின் மானியத்தினையும் உயர்த்திடவேண்டும். பைபர் படகுகள், வலைகள் வாங்குவதற்கும் மானியம் வழங்க வேண்டும். இதனால் செலவினங்கள் குறையும். குறைந்த வருவாய் கிடைத்தாலும் அது போதுமானதாக இருக்கும். மீனவர்கள் நலன்காக்க அரசு இவற்றை செயல்படுத்தி வேண்டும்.


- மீனவர்கள், பழவேற்காடு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202206:34:00 IST Report Abuse
அப்புசாமி மீன்வளத்துறை முருகர் கிட்டே சொன்னீங்களா? வருமானம் ரெட்டிப்பாக்க வழி செய்வாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X