பொன்னேரி:மீஞ்சூர் வட்டாரத்தில் சம்பா பருவத்திற்கு, 29 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த மாதம், நெற்பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருந்தது.
பல்வேறு மருந்துகளை தெளித்து பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுபடுத்துவதற்கு விவசாயிகள் திணறி வந்தனர். மழைப் பொழிவும் இல்லாததால், பயிர்களின் வளர்ச்சி பாதிப்பை எண்ணி விவசாயிகள் கவலையும் அடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை தாமதாக துவங்கியது. கடந்த மாதம் 29ம் தேதி துவங்கிய பருவ மழை சீரான இடைவெளியில், பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பொழிந்து வருகிறது.
ஆறு மற்றும் ஏரிகளில் மழை நீர் தேங்கி உள்ளன. மழை பொழிவால், பயிர்களில் இருந்த பூச்சிகள், தண்ணீரில் தேங்கியிருந்த பச்சைபாசிகள் ஆகியவை அடித்து செல்லப்பட்டன.
வளர்ச்சி பாதிப்பில் இருந்து மீண்டு, நெற்பயிர்களும் பச்சை பசுமையாக மாறி சீரான வளர்ச்சியை தொடர்கின்றன. இந்நிலையில், விவசாயிகள் தேவையற்ற மருந்துகளை தெளிக்க வேண்டாம் என, வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது:
தற்போதைய மழை, விவசாயத்திற்கு தேவையானது.
யூரியா உள்ளிட்ட மருந்துகளை தற்போது தெளிக்க வேண்டாம். தேவையற்ற மருந்துகளை தவிர்ப்பதன் வாயிலாக சீரான வளர்ச்சியை பயிர்கள் பெறும்.
மழைக்காலம் முடிந்து, பயிர்களின் வளர்ச்சி பாதிப்பு, நோய் பாதிப்பு ஏற்படின் அதற்கு தகுந்தாற்போல் மருந்துகளை தெளிக்க வேண்டும்.
தற்போதைய நிலையில், வேளாண்மை துறையின் ஆலோசனையின்றி தேவையற்ற மருந்துகளை தெளிப்பதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.