அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மூன்று நாள் கலை திருவிழா நேற்று துவங்கியது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை திருவிழா நடத்த அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவு, 9, 10ம் வகுப்பு ஒரு பிரிவு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு ஒரு பிரிவு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நேற்று துவங்கின. அன்னுார், சொக்கம்பாளையம், காட்டம்பட்டி, ஆனையூர், கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், பசூர், பொன்னேகவுண்டன் புதுார், பெரிய புத்துார் அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 15 நடுநிலைப் பள்ளிகளிலும் கலைத்திருவிழா துவங்கியது.
சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் நடுவர்கள் முன்னிலையில் நேற்று கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம் நடந்தது. மாணவியர் கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர். மாணவர்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தினர். பள்ளி அளவில், ஒவ்வொரு பிரிவிலும், முதலிடம் பெறுவோர் தேர்வு செய்யப்பட்டு, அடுத்து வட்டார அளவில் போட்டி நடக்க உள்ளது. வட்டார அளவில் முதலிடம் பெறுவோர் மாவட்ட அளவில் பங்கேற்க தகுதி பெறுவர்.