வில்லிவாக்கம், நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, வில்லிவாக்கத்தில் அரைகுறையாக இணைக்கப்படாமல் இருந்த, மழை நீர் வடிகால் சீரமைக்கப்பட்டது.
சென்னையில் கடந்த பருவமழையின் போது, பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கி, மக்கள் கடும் அவதியடைந்தனர். அதன் பின், பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக வடிகால் அமைக்கும் பணிகள் நடந்தன.
அந்த வகையில், கடந்த பருவமழையின் போது, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 94வது வார்டு வில்லிவாக்கம், பாபா நகர் பகுதியில் வெள்ள நீர் தேங்கியது.
இதனால், இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். தற்போது இப்பகுதியில், வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் நிறைவடைந்தன.
பணிகள் முடிந்தும், சில இடங்களில் இணைக்கப்படாமல் அரைகுறையாக விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, ஆறாவது தெருவில் இணைக்கப்படாமல், திறந்த வெளியில் வடிகால் உள்ளது.
இதனால், அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல், வடிகால் பணிக்காக, தெரு விளக்குகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அரைகுறையாக இணைக்கப்படாமல் இருந்த வடிகாலை சீரமைத்தனர்.
இணைக்கப்படாமல் உள்ள வடிகால்களை கண்காணித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.