புதுடில்லி, :''மாநில அளவில் ஆலோசனைகள், விவாதங்கள், கருத்து கேட்புகள் முடிந்தவுடன், நாடு முழுதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
புதுடில்லியில் தனியார்'டிவி' ஒன்று நேற்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில்,பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமித் ஷா கூறியதாவது:
![]()
|
ஜன சங்கம் காலத்தில் இருந்தே, பா.ஜ., பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதை அமல்படுத்துவோம் என்று நாட்டு மக்களுக்கு நாங்கள் உறுதியளித்து உள்ளோம்.
ஆலோசனைகள்
பா.ஜ.,வில் மட்டுமல்ல, இது அரசியல் சாசனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான நேரத்தில், நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகள் உரிய சட்டம் இயற்ற வேண்டும் என, அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்முடைய நாடு மதச்சார்பற்றது. அப்படி இருக்கையில் மதத்தின் அடிப்படையில் எப்படி பாகுபாடு இருக்க முடியும். இந்த நாடும், மாநிலங்களும் மதச்சார்பற்றதாக உள்ள நிலையில், சட்டங்கள் மட்டும் எப்படி மதத்தின் அடிப்படையில் இருக்க முடியும். இதனால்,அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டத்தையே பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகள் உருவாக்க வேண்டும்.
இது தொடர்பாக, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் மாநிலங்களில் ஆலோசனைகள் துவங்கியுள்ளன.
இவ்வாறு மாநிலங்களில் இருந்து பெறப்படும் கருத்துகள், ஆலோசனைகள் அடிப்படையில், பொது சிவில் சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என்பது என்னுடைய தனிப்பட்ட வெற்றி கிடையாது. நாங்கள் அனைவரும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்ளோம். அதனால், ஒவ்வொரு வெற்றியும் அரசுக்கே சொந்தம்.
சிறப்பு அந்தஸ்து இருப்பதால்தான், இந்தியாவுடன் ஜம்மு - காஷ்மீர் இணைந்திருப்பதாக கூறி வந்தனர். தற்போது அந்த அந்தஸ்து நீக்கப்பட்டது; ஆனாலும், ஜம்மு - காஷ்மீர் நம் நாட்டின் ஒரு பகுதியாகவே உள்ளது.
அங்கு பயங்கரவாதம் என்பது மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்தது. அதை அகற்றி வருகிறோம். அங்கு பயங்கரவாத சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
கல்வீசி தாக்குதல் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை இந்த அரசின் மிகப் பெரிய வெற்றியாக பார்க்கிறோம்.அமலாக்கத் துறை, சி.பி.ஐ., ஆகியவற்றை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக வீண் புகார் கூறி வருகின்றனர்.
அவ்வாறு தவறாகப் பயன்படுத்தி இருந்தால், வழக்குகள் தொடரலாமே? ஆனால் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அனைத்தையும்அரசியல் ரீதியாகவேபார்க்கின்றனர்.
பா.ஜ., வெற்றி பெறும்
புதுடில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் பல வசதிகள்கிடைத்து வருகின்றன.இது தொடர்பான 'வீடியோ'க்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து விசாரித்துநடவடிக்கை எடுக்க வேண்டியது, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பொறுப்பு.நானும் சிறை சென்றுள்ளேன்; அப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆனால், புதுடில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடம் இதை எதிர்பார்க்க முடியாது.
ஒரு மாநில முதல்வர் அல்லது அமைச்சர் மீது வழக்குகள் இருந்தால், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுபோன்ற சூழ்நிலை வரும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்க்கவில்லை.
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையே தான் போட்டி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சாதனைகளுடன் பா.ஜ., வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement