விவசாயிகள் எதிர்பார்த்த நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேறியது! பனமலை ஏரிக்கு தண்ணீர் வந்ததால் மகிழ்ச்சி

Added : நவ 24, 2022 | |
Advertisement
செஞ்சி : விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் 52 ஆண்டு கால கனவாக இருந்து வந்த நந்தன் கால்வாய் மூலம் பனமலை ஏரிக்குதண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், துறிஞ்சல் ஆற்றில் இருந்து விழுப்புரம் மாவட்டம், பனமலை வரை தண்ணீர் கொண்டு வர கடந்த 1970ம் ஆண்டு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நந்தன் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது.இதற்காக,
 விவசாயிகள் எதிர்பார்த்த நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேறியது! பனமலை ஏரிக்கு தண்ணீர் வந்ததால் மகிழ்ச்சி

செஞ்சி : விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் 52 ஆண்டு கால கனவாக இருந்து வந்த நந்தன் கால்வாய் மூலம் பனமலை ஏரிக்குதண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், துறிஞ்சல் ஆற்றில் இருந்து விழுப்புரம் மாவட்டம், பனமலை வரை தண்ணீர் கொண்டு வர கடந்த 1970ம் ஆண்டு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நந்தன் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 12.40 கி.மீ., துாரம், விழுப்புரம் மாவட்டத்தில் 25.46 கி.மீ., என 37.86 கி.மீ., துாரத்திற்கு பனமலை ஏரி வரை கால்வாய் அமைக்கப்பட்டது.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஏரிகள் மற்றும் பனமலை ஏரி நிரம்பிய பிறகு வெளியேறும் உபரி நீர் மூலம் முட்டத்துார், சங்கீதமங்கலம், வேள்ளேரிப்பட்டு உள்ளிட்ட 12 ஏரிகள் என 36 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர திட்டமிடப்பட்டது.

இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,566 ஏக்கர் நிலமும், விழுப்புரம் மாவட்டத்தில் 5,032 ஏக்கர் நிலமும் பாசனம் பெறும். திட்டம் கொண்டு வந்ததில் இருந்து இந்த கால்வாயில் தண்ணீர் வருவதில் பல இடையூறுகள் ஏற்பட்டது.

இதனால், கடந்த 1990ம் ஆண்டு 22.50 லட்சம் ரூபாயும், 1997ம் ஆண்டு ஒரு கோடியே 9 லட்சம் ரூபாயும், 2001ம் ஆண்டு 15 லட்சம் ரூபாயும், 2014ம் ஆண்டில் உலக வங்கி நிதி மூலம் 14.30 கோடி ரூபாயும் செலவிடப்பட்டது. அதன்பிறகும் பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து 2020ம் ஆண்டு விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தைத் துவங்கினர்.

இவர்கள் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்வாயைத் துார் வாரினர். இதையடுத்து 2021ம் ஆண்டு நந்தன் கால்வாயைத் தரம் உயர்த்தி சீரமைக்க திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 12.5 கோடி ரூபாய், விழுப்புரம் மாவட்டத்திற்கு 27.5 கோடி ரூபாய் என 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் பலனாக கடந்த அந்த ஆண்டு துறிஞ்சலாறு தண்ணீர் சோ.குப்பம் ஏரி வரை வந்தடைந்தது. தேவதானம்பேட்டை காட்டு பகுதியில் தடைகள் இருந்ததால் மேற்கொண்டு தண்ணீர் வரவில்லை.

இதற்கு அடுத்து இருந்த கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதால் கணக்கன்குப்பம், தேவதானம்பேட்டை பகுதி காடு, மலைகளில் இருந்து வந்த வெள்ளம் பனமலை ஏரிக்குச் சென்றது. இதனால் கடந்த ஆண்டு ஏரி நிரம்பியது.

இந்த ஆண்டு அணையில் இருந்து கடந்த மாதம் தண்ணீர் திறந்தனர். அப்போது விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள மாதம்பூண்டி, நல்லாண்பிள்ளை பெற்றாள் ஏரிகள் பாதியளவும், பாக்கம், சோ.குப்பம் ஏரிகள் முழுமையாகவும் நிரம்பின. தேவதானம்பேட்டை வனப்பகுதியில் தடையால் தண்ணீர் நின்றது.

கடந்த ஒரு வாரமாக பொதுப்பணித் துறையினர் தடை ஏற்பட்ட பகுதிகளை சீரமைத்தனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 11:55 மணிக்கு துறிஞ்சலாற்றின் தண்ணீர் கணக்கன்குப்பத்தில் துவங்கும் நந்தன் கால்வாயை வந்தடைந்தது. நேற்று இந்த இடத்தில் விவசாயிகள் சிறப்பு பூஜை செய்து தண்ணீரை பனமலைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று மாலை இந்த தண்ணீர் பனமலையை சென்றடைந்தது. 52 ஆண்டுகால கனவு நிறைவேறி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X