மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்வாகியுள்ளார். இவர் பல ஆண்டுகள் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளார். இவருக்கு 2018ல் மலேசிய மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது மன்னிப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து போர்ட் டிக்சன் இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். “எனது அன்வர் விடுதலைப் பெற்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு என் சார்பிலும், மக்கள் நீதி மையம் சார்பிலும் வாழ்த்துகள்” என பேசி கமல் அப்போது வெளியிட்ட வீடியோ, தற்போது மீண்டும் சுற்றலுக்கு வந்துள்ளது.
நடிகர் கமல் திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காணப்படுவதாகவும், அதிலிருந்து நன்கு குணமாகி வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது. ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளனர். இந்த சூழலில் கமல் மலேசிய பிரதமராக பதவியேற்றுள்ள அன்வர் இப்ராஹிமை வாழ்த்துவது போன்ற வீடியோ வாட்ஸ்ஆப்பில் பரவத் தொடங்கியது. உண்மையில் அது 2018ல் கமல் வெளியிட்ட வீடியோ.
அதில் கமல் கூறியிருப்பதாவது: எனது நண்பர் அன்வர் இப்ராஹிம் நியாயமற்ற சிறை தண்டனைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு அரச மன்னிப்பும் கிடைத்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உலக அரசியல் சூழல் முன்மாதிரியான தலைவர் தேவை என ஏங்குகிறது. அவர்கள் நலிவடைந்தவர்களைப் பற்றிய சரியான புரிதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அன்வர் இப்ராஹிம் அதற்கான சிறந்த உதாரணம். நம்பிக்கைக்கான ஒளி அவர். அன்வர் இப்ராஹிமின் எழுச்சியால் இந்திய - மலேசிய உறவு வலுவாக வளர்ச்சி காணும். தமிழ்நாட்டிற்கும் மலேசியாவுக்குமான தொடர்பு வரலாறு அறிந்த ஒன்று. அன்வர் இப்ராஹிம் மூலம் இந்த இணைப்பு மேலும் வலுவடையும். இவ்வாறு கூறியுள்ளார்.