கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கலை பண்புகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் சிறப்பிக்கும் வகையில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கும் ஆண்டுதோறும் பாராட்டு சான்றிதழ்களுடன் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கிய, 18 வயதுக்குட்பட்ட 3 கலைஞர்களுக்கு கலை இளமணி விருது, தலா ரூ.4 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. 19 - 35 வயதுக்குட்பட்ட மூவருக்கு கலை வளர்மணி விருது, தலா ரூ.6 ஆயிரம் காசோலை, 36 - 50 வயதுக்குட்பட்ட மூவருக்கு கலை சுடர்மணி விருது மற்றும் தலா ரூ.10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.
51 - 65 வயதுக்குட்பட்ட மூவருக்கு கலை நன்மணி விருது மற்றும் தலா ரூ.15 ஆயிரம் காசோலை, 66 வயது மேற்பட்ட 3 கலைஞர்களுக்கு கலை முதுமணி விருது மற்றும் தலா ரூ.20 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் (பொ) நீலமேகன், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.