சென்னை:தமிழக காங்., பொருளாளர் ரூபி மனோகரனை கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதாக, தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்தது. ஆனால், 'சஸ்பெண்ட்' உத்தரவுக்கு, கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தடை விதித்துள்ளார்.
கடந்த 15ம் தேதி, தமிழக காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் மாநில தலைவர் அழகிரி ஆதரவாளர்களுக்கும், பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ஆதரவாளர்களுக்கும் இடையே அடிதடி சண்டை நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் நேரில் ஆஜராகுமாறு, ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கடிதம் அனுப்பியிருந்தார்.
சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ரஞ்சன்குமார் ஆஜராகி, தன் தரப்பிலான விளக்கத்தை அளித்தார். ஆனால், ரூபி மனோகரன் இரண்டு வாரம் அவகாசம் கேட்டு, விசாரணையை புறக்கணித்தார்.
பின், கே.ஆர்.ராமசாமி கூறுகையில், ''ரூபி மனோகரன் கேட்டிருந்த கால அவகாசம் ஏற்கத்தக்கதாக இல்லை. அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்; அதுவரை கட்சியில் இருந்து, அவரை இடைநீக்கம் செய்கிறோம்,'' என்றார்.
'சஸ்பெண்ட் ' ரத்து
காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கையில், 'ரூபி மனோகரன் மீதான நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. அவரது நியாயத்தை கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; இது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒருதலைபட்சமான நடவடிக்கை' எனக் கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன் அறிக்கையில், 'எம்.எல்.ஏ.,வை நீக்குவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. இந்த அவசர முடிவு முற்றிலும் தவறானது. தற்காலிக நீக்கத்தை உடனே திரும்ப பெற வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கையில், 'ரூபி மனோகரன் மீது எடுத்துள்ள சஸ்பெண்ட் நடவடிக்கை, கட்சி விதிமுறைகளுக்கு முரணாக அமைந்துள்ளது. எனவே, சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப்படுகிறது' எனக் கூறியுள்ளார்.
ரூபி மனோகரன் பேட்டி: கட்சிக்காக, 20 ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். தற்போது மாநில பொருளாளராகவும், எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளேன். என் விளக்கம் கேட்காமல், 'சஸ்பெண்ட்' செய்தது சரியல்ல.என்னை மட்டும் விசாரித்தால் போதுமா? சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் விசாரிக்க வேண்டும்; நியாயம் கேட்டு, டில்லிக்கு செல்வேன். என் மீது நடவடிக்கை எடுக்க, மாநில தலைமைக்கு அதிகாரம் உள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.