குன்னுார்:குன்னுார் அருகே அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில், மீண்டும் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், ராணுவத்திற்கான வெடி மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
நேற்று காலை, 10:45 மணிக்கு பாதுகாப்பு காவலர் படைப்பிரிவில், 'ஷெட்' அமைக்க குழாய் ஒன்றில் 'வெல்டிங்' வைக்கப்பட்டது.
அப்போது பலத்த சத்தத்துடன் வெடி வெடித்ததில், பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த மனோஜ், 39, ஹிமான்சு மாண்ட்லோய், 50, ஆகியோர் காயமடைந்தனர். இதில், மனோஜின் விரல் துண்டானது.
குன்னுார் ஆர்.டி.ஓ., பூஷணகுமார், தாசில்தார் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, விபரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பித்தனர்.
தொழிற்சாலை மக்கள் தொடர்பு அதிகாரி சிக்காலா வெளியிட்ட அறிக்கையில், 'இந்த விபத்தில் காயமடைந்த இருவருக்கும் தொழிற்சாலை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
'பின், மேல் சிகிச்சைக்காக, கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்' என, கூறப்பட்டுள்ளது.
கடந்த, 19ம் தேதி, கார்டைட் பிரிவில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.