சேலம்:அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, ஒன்பது பேரிடம், 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த தேன்மொழி, 28, சீனிவாசன், 32, காசி விஸ்வநாதன், 29, மோகனப்பிரியா, 25, சுமதி, 28, ஆகியோர் , போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
கோவை, பிரியம் நகரைச் சேர்ந்தவர் சுதாகரன், 35. இவர், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உதவியாளர் என, எங்கள் நண்பர்கள் வாயிலாக அறிமுகம் ஆனார்.
அத்துடன் அமைச்சர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி நம்பிக்கையை ஏற்படுத்தினார். பணம் கொடுத்தால், பத்திர பதிவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி, ஒன்பது பேர், 30 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தோம். வேலை வாங்கித் தராததோடு, பணத்தை கேட்டபோது தர மறுத்துவிட்டார்.
அத்துடன் சுதாகரனும், அவரது மனைவி பிரபாவதியும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.