கோவை:கோவை மாவட்டத்தில், நீட் இலவச பயிற்சி வகுப்பு, பத்து மையங்களில், நாளை துவங்குவதாக, முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்தார்.
நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதை முழுமையாக மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில், ஒன்றியம் வாரியாக இலவச நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் வகுப்பு கையாளப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், 10 மையங்களில், முதற்கட்டமாக நாளை (நவ.,26ம் தேதி) வகுப்பு துவங்குகிறது. இதில், பங்கேற்க 300 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தகுதி வாய்ந்த கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில், இனி நீட் வகுப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறுகையில், '' நீட் பயிற்சி வகுப்பில் பங்கேற்க, 300 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மாணவர்களின் ஆர்வம், ஈடுபாடு பொறுத்து, தேவைப்பட்டால் கூடுதல் மையங்கள் திறக்கப்படும். மாநிலம் முழுக்க, இவ்வகுப்புக்கான செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. தேர்வுகள் வாயிலாக பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.