பெலகாவி-பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டி, கிராமத்தினர் யாகம் செய்தனர்.
பெலகாவி அத்தாணி அருகே உள்ள சுட்டட்டி கிராமத்தில் இருந்து எல்லம்மனவாடி வரை 6 கி.மீ.,க்கு சாலை சேதம் அடைந்துள்ளது. சாலையை சீரமைக்க கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் குமடள்ளியை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், சாலை சீரமைக்கப்படவில்லை. இந்த சாலையில் தினமும் விபத்துகள் அதிகரிக்கின்றன. பள்ளி மாணவ - மாணவியர், கர்ப்பிணியர் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, நேற்று காலை சுட்டட்டி கிராமத்தினர் நடுரோட்டில் யாகம் நடத்தி, நுாதன போராட்டம் நடத்தினர்.
அப்போது, 'எங்கள் தொகுதி எம்.எல்.ஏ., மகேஷ் குமடள்ளிக்கு நல்ல புத்தி வர வேண்டும்' என, வேண்டி கோஷங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.