திருப்பூர்:திருவண்ணாமலையில் நடக்கும் மாநில தடகள போட்டியில் பங்கேற்க, திருப்பூரில் இருந்து, 58 வீராங்கனையர் சென்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், 63வது குடியரசு தின விழா மாநில தடகள போட்டி திருவண்ணாமலை எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் இன்று துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. மாநிலத்தின், 39 மாவட்டங்களில் இருந்து மாவட்ட தடகளத்தில் முதல், இரண்டு இடங்களை பெற்ற வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மாவட்ட தடகள போட்டியில் 100 மீ., முதல், 3,000 மீ வரையிலான போட்டிகள், நீளம், உயரம், தடைதாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி, வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற, 58 வீராங்கனையர் மாநில போட்டிக்கு தகுதி பெற்று, சென்றுள்ளனர்.
இவர்களுக்கு வழியனுப்பு விழா, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார். மூத்த உடற்கல்வி இயக்குனர் சோமசுந்தரம் தலைமையில், உடற்கல்வி இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், முருகன், வந்தனா, லாவண்யா மாவட்ட அணி பொறுப்பாளராக பயணிக்கின்றனர்.
மாணவருக்கான தடகள போட்டி வரும், 28, 29 மற்றும், 30ம் தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது; திருப்பூரில் இருந்து, 92 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்கள், 27ம் தேதி புறப்படுகின்றனர்.