கோவை:இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,)சார்பில், 'எதிர்கால வேலைவாய்ப்புக்கு ஏற்ப மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய உயர்கல்வி' என்ற தலைப்பில், உயர்கல்வி மாநாடு கோவை நீலம்பூர் லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்தது. ஸ்ரீ சிவசுப்ரமணிய பொறியியல் கல்லுாரியின் தலைவர் கலா விஜயகுமார் மாநாட்டை துவக்கிவைத்தார்.
இதில், அவர் பேசியதாவது:
தொழில்நுட்ப துறையின் தேவைக்கு ஏற்ப உரிய மாற்றங்கள் கல்வித்துறையில் ஏற்படவில்லை. உயர்கல்வித்துறையில் உரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் மிகப்பெரும் இடைவெளி உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டியது அவசியம். புதிய வேலைவாய்ப்புகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், திறன் படைத்தவர்களாக உருவாக்கும் அளவிற்கு, கல்வி நிறுவனங்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படவேண்டும்.
இந்தியாவில், 2035ம் ஆண்டுக்குள் உயர்கல்வி சேர்க்கை 50 சதவீதம் இருக்க, மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
அதேசமயம், 2022 இந்திய திறன் அறிக்கை புள்ளிவிபரங்களின் படி, பட்டம் முடித்து வருபவர்களில்,45.9 சதவீதத்தினர் மட்டுமே தொழில்துறை எதிர்பார்க்கும் திறன்களை பெற்றவர்களாக உள்ளனர் என்பதையும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாநாட்டில், எதிர்காலத்தில் தொழில்துறைக்கு தேவையான திறன்கள் என்ற தலைப்பில் ஏ.ஐ.சி.டி.இ., முன்னாள் தலைவர் மந்தா, போஸ் குளோபல் சாப்ட்வேர் தொழில்நுட்ப நிறுவன துணைத்தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் விளக்கமளித்தனர். தொடர்ந்து, பல்துறை பாடத்திட்ட மேம்பாடு, திறன் வளர்ப்பு, தேசிய கல்விக்கொள்கை , கற்பித்தலில் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் தொழில்துறை, கல்வித்துறை வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.
துவக்கவிழா நிகழ்ச்சியில், ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவன தாளாளர் நந்தினி, ஏபி.டி., நிறுவன நிர்வாக இயக்குனர் சங்கர் வாணவராயர், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.