கோவை;கோவை விழாவின், 15வது பதிப்பு, வாலாங்குளத்தின் கரையில் நேற்று கோலாகலமாக துவங்கியது. கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர், விழாவின் சின்னம் மற்றும் போஸ்டரை வெளியிட்டு, விழாவை துவக்கி வைத்தனர்.
அப்போது கோவை கலெக்டர் சமீரன் பேசுகையில், ''கோவையின் சிறப்பம்சம், வேறு எந்த நகரத்துக்கும் இருக்காது,'' என்றார்.
முன்னதாக, யங் இந்தியன்ஸ் கோவை கிளை தலைவர் ஸ்ரீ குமரவேல் வரவேற்றார். முன்னாள் தலைவர் ஜெயபிரசாந்த் கோவை விழா குறித்து விளக்கினார்.கோவை விழாவை முன்னிட்டு, 15 முக்கிய நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு அமைப்புகள் மூலம், 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையின் முதல், இசைக்கு ஏற்றவாறு அசையும்நீரூற்று நிகழ்ச்சி, வாலாங்குளத்தில் நடத்தப்பட உள்ளது. குளங்களை கொண்டாடும் விதமாக, கடந்தாண்டுகளில் நடத்தப்பட்ட லேசர் ஷோ, ராயல் படகு கண்காட்சி மற்றும் சிம்பொனி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.
இது தவிர, மராத்தான், சைக்ளோத்தான், 70க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் 'ஆர்ட் ஸ்ட்ரீட், கோவை மக்களின் திறமைகளை வெளிக்கொணர சிறப்பு நிகழ்ச்சி, அக்ரி நெக்ஸ்ட், பழங்கால கார்களின் அணிவகுப்பு, சமையல் கலை, புதிய தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், இசை மழை, பாரா விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
இதுதவிர, கலை விழா, செட்டிநாடு விழா, உணவு சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.
துவக்க விழாவில், கொடிசியா துணைத்தலைவர் கார்த்திகேயன், ராக் அமைப்பின் கவுரவ செயலாளர் ரவீந்திரன், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை கவுரவ செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.