மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வந்ததால், மரங்களில் ஏறி தப்பிய பள்ளி மாணவர்கள் உட்பட, ஏழு பேர் மீட்கப்பட்டனர்.
கோவை பீளமேட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஏழு பேர் நேற்று மாலை,5:00 மணிக்கு, மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறைக்கு வந்தனர். விளாமரத்துார் அருகே பவானி ஆற்றில், குளித்துக் கொண்டிருந்தனர்.
மாலை, 6:00 மணிக்கு ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வந்துள்ளது. கரைக்கு வர முடியாததால், ஆற்றின் மையப் பகுதியில் உள்ள மரங்களில், ஏழு பேரும் ஏறிக்கொண்டனர்.
விவசாயி ஒருவர், ரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் நிற்பதை பார்த்து, ஆற்றுக்கு சென்று சத்தம் போட்டுள்ளார். அப்போது மரங்களில் இருந்த நபர்கள், தங்களை காப்பாற்றும்படி கூறினர். அவர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், பரிசல்காரருக்கும் தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு துறையினர், பரிசல்காரர் உதவியுடன், மரத்தில் இருந்து ஒவ்வொருவராக கீழே இறக்கி, கரைக்கு பத்திரமாக அழைத்து வந்தனர்.