வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த முடிவுகளை செயல்படுத்துவதில், அரசு மந்தமாக உள்ளதால், தொழிலாளர்கள் சோர்வடைந்து உள்ளனர்' என, தி.மு.க., - எம்.பி., சண்முகம் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஒப்பந்தத்தில் முடிவான பல விஷயங்கள் இன்னும் செயல்படுத்தப் படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள கூட்டுக்குழு சங்கத்தினர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தி.முக., ராஜ்யசபா எம்.பி.,யும், தொ.மு.ச., பொதுச் செயலருமான சண்முகம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு அனுப்பியுள்ள கடிதம்: ஊதிய ஒப்பந்தத்தின்படி, நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் பணியாற்றியோருக்கு, 300 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை.
![]()
|
வேலை நிறுத்த நாட்களை, பணி நாட்களாக்க ஒப்புதல் அளித்த நிலையில், 2014ல் நடந்த நான்கு நாள் ஸ்டிரைக்குக்கு, ஒரு நாள்; 2017ல் நடந்த நான்கு நாள் ஸ்டிரைக்கிற்கு இரண்டு நாட்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டு உள்ளது.
பதவி உயர்வு தொடர்பாக அளித்த ஒப்புதல்கள், செயல்படுத்தப்படவில்லை. ஓய்வூதியரின் அகவிலைப்படி உயர்வு, பணியில் இறந்தோர், விருப்ப ஓய்வு பெற்றோர், உடல் நல பாதிப்பால் விடுவிக்கப்பட்டோருக்கு, பணப் பலன்கள் வழங்கப்படவில்லை.
நிலையாணை, குடும்ப நலநிதி பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தொழிலாளர்களிடம் சோர்வு ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.