மாநகராட்சி வார்டுக்குள் கட்டடம் கட்ட வாஸ்து பூஜை போட்டால் போதும். சாம்பிராணி வாசம் பிடித்து தேடி வந்து விடுகிறார்கள் லஞ்ச பேர்வழிகள். தவிர புதிய சொத்து வரி விதிப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு உட்பட பல பணிகளுக்கு தனி 'லஞ்சப் பட்டியல்' வைத்துள்ளனர்.
பட்டியலில் சொல்லும் லஞ்சத்தை கொடுத்தால் தான் அதற்குரிய ஆவணங்கள் அடுத்த கட்டம் நகரும். இல்லை என்றால் அலுவலர்களின் காலுக்கு அடியில் கிடப்பில் போடப்படும். சொத்து வரி விதிக்க வேண்டிய கட்டடம் அளவீடு செய்வதில் நடக்கும் முறைகேடு உட்பட மாநகராட்சியில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என கடந்த வாரம் தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் யார் உத்தரவிட்டால் என்ன. எங்கள் லஞ்சத்திற்கு என்றும் பஞ்சம் வராது' என வசூல் வேட்டையர்கள் குறியாக இருக்கிறார்கள்.
இவ்வளவு ஏன் மாநகராட்சி மண்டல மக்கள் குறைதீர் கூட்டத்தில் தரும் மனுக்களுக்கு தீர்வு காண கூட லஞ்சம் கேட்கிறார்கள். எனவே லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக முன்வந்து லஞ்ச பேர்வழிகளை கண்டறிந்து விசாரிக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாநகராட்சி மைய, மண்டல அலுவலகங்கள், வரி வசூல் மையங்கள், வாகனங்கள் உட்பட பிற பொது இடங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வேண்டிய முறை, தொலைபேசி, இமெயில் குறித்த விபரங்கள் அடங்கிய அறிவிப்பு, எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். தவிர மாநகராட்சிக்கு என தனி லஞ்ச ஒழிப்பு பிரிவை உருவாக்கி கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மக்கள் புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.