கோவை: ''மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது ஷாரிக்கை தீபாவளியன்று ஈஷா யோகா மையத்தில் பார்த்தேன்'' என கோவையைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் தெரிவித்துள்ளார்.
கோவை செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் 45; கால் டாக்சி டிரைவர். இவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் அக். 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கார் குண்டு வெடித்தது. அன்றும் அதற்கு மறுநாள் தீபாவளியன்றும் நான் சுற்றுலா பயணியரை அழைத்துக் கொண்டு ஈஷா யோகா மையம் சென்றேன்.
தீபாவளியன்று நான் அழைத்துச் சென்ற பயணியர் ஈஷா மையத்துக்குள் சென்று விட்டனர். நான் சாப்பிடுவதற்காக 'கேன்டீன்' சென்றேன். அப்போது சந்தன நிறத்தில் பூ போட்ட குல்லா அணிந்த வாலிபர் ஆதியோகி சிலை முன் 'செல்பி' எடுத்துக் கொண்டிருந்ததை கண்டேன். அவருடன் இரண்டு பேர் இருந்தனர்.
அவர்கள் ஈஷா மையத்தில் வெவ்வேறு இடங்களை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறிப்பிட்ட நாள் காலை 10:45 முதல் 11:00 மணிக்குள் நடந்தது. அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் இடம் என்பதால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இப்போது மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் படம் பத்திரிகைகளில் வெளியானதை பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
குறிப்பிட்ட அந்த நபர் தான் தீபாவளியன்று ஈஷா மையத்தில் நான் பார்த்த நபர். இது பற்றி போலீசார் விசாரித்தால் நான் நேரில் கண்டது பற்றிய உண்மைகளை தெரிவிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதி முகமது ஷாரிக்கின் அலைபேசி 'வாட்ஸ் ஆப்' முகப்பு படமாக கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை இருந்தது போலீஸ் விசாரணையில் ஏற்கனவே தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கால் டாக்சி டிரைவர் அளித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.