டாடாவின் நிறுவனத்தின் டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனம் இ-சி3 எலெக்ட்ரிக் காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெட்ரோல் டீசல் உயர்வால் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முன்ணனி நிறுவனமாக விளங்கும் டாடா மலிவு விலையிலும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டாடாவை தொடர்ந்து சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
![]()
|
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலிவு விலையில் சி3 ஹேட்ச்பேக் ரக காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வரவேற்பை பெற்றது. தற்போது தனது சி3 மாடலில் இ-சி3 என்ற எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது.
![]()
|
அடுத்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் கார்களை விற்பனை செய்வதில் டாடா தான் முதலிடத்தில் உள்ளது. தற்போது இந்த சிட்ரோன் இ-சி3 வருகை மூலம் போட்டி அதிகரிக்கலாம் என தெரிகிறது. குறிப்பாக, மலிவு விலை எலெக்ட்ரிக் காரை விரும்புவோர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
|
இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரில் நிறுவனம் 30.2 kWh பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல், எல்எஃப்பி ரக செல்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதனை ஸ்வோல்ட் எனும் சீன நிறுவனத்திடமிருந்து சிட்ரோன் பெற இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன், வீட்டிலேயே வைத்து இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ளும் விதமாக நிறுவனம் 3.3 kW ஏசி சார்ஜிங் கருவியையும் சிட்ரோன் நிறுவனம் வழங்க உள்ளது.
![]()
|
இந்த புதிய இ-சி3 காரில் 63 கிலோவாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மோட்டார், 84.5 பிஎச்பி பவரையும், 143 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டதாகும். இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி-க்கு போட்டியாக இந்த சிட்ரோன் இ-சி3 களமிறங்க உள்ளது. ரூ. 8.49 லட்சத்திற்கு டியாகோ இவி இந்திய சந்தையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதை விட குறைவான அல்லது சற்று அதிக விலையிலேயே சிட்ரோன் இ-சி3 விற்பனைக்கு வரலாம்.