புதுடில்லி: காலனித்துவ சகாப்தத்தில் சதியின் காரணமாக எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்களில் தொலைந்து போன தனது பாரம்பரியத்தை கொண்டாடுவதன் மூலம் இந்தியா தனது கடந்த கால தவறுகளை சரி செய்து வருகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அசாமில் அஹோம் அரசாட்சி இருந்த 17 ம் நூற்றாண்டில் முகாலய மன்னர் அவுரங்கசீப்பின் படைகளை தோற்கடித்த தளபதி லச்சித் பாபுகானின் 400ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது இந்தியாவின் வரலாறு மட்டுமல்ல.
இந்தியாவின் வரலாறு என்பது அவர்களை எதிர்த்து போரிட்டதும், போர்களை முன்னின்று நிகழ்த்திய மாவீரர்கள் மற்றும் அவர்களின் தியாகங்களையும் சொல்வதே வரலாறு. அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வீரத்துடனும் துணிச்சலுடனும் நின்றது தான் இந்தியாவின் வரலாறு.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்கு பிறகும் காலனித்துவ ஆட்சியில் பின்னப்பட்ட சதி காரணமாக எழுதப்பட்ட வரலாறு தான் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு, நம்மை அடிமைகளாக்கிய வெளிநாட்டவர்களின் திட்டங்களை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அவை நடக்கவில்லை.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சர்வாதிகாரத்திற்கு எதிரான கதைகள் மறைக்கப்பட்டன. நீண்ட கால அடக்குமுறை ஆட்சியில், சர்வாதிகாரத்திற்கு எதிரான போரில் வெற்றி கிடைத்ததற்கான ஏராளமான வரலாறுகள் உள்ளன. அந்த வரலாறுகளை வெளிக்கொண்டு வராமல் விட்டதவறு தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
