பொன்னேரி:போக்குரவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், தச்சூர் - பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில், மூன்றாவது முறையாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் கனரக வாகனங்கள் வண்டலுார் வெளிவட்ட சாலையில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர், காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் இரு துறைமுகங்கள், ஐந்து அனல் மின் நிலையங்கள், கப்பல் கட்டும் நிறுவனம், எரிவாயு மற்றும் பெட்ரோலிய முனையங்கள் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இந்நிறுவனங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் தச்சூர் - பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும், 5,000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால் பொன்னேரி - மீஞ்சூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரத்தில் பணிக்கு சென்று வருவோர், பள்ளி மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த சாலையில் உள்ள பொன்னேரி பழைய பேருந்து நிலையம், தாயுமான் செட்டி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் சாலை குறுகலாக இருப்பதால், கனரக வாகனங்கள் எதிர் எதிரே செல்லும்போதும், வளைவுப் பகுதிகளில் திரும்பும்போதும் ஒன்றுடன் ஒன்று உரசியபடி செல்கின்றன.
கனரக வாகனங்கள் வரிசையாக செல்லும்போது, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன. அவ்வப்போது விபத்துக்களும் நேரிடுகின்றன.
டோல்கேட் தவிர்க்க
மீஞ்சூர், அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி, மணலி பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு சென்று வரும் வாகனங்கள், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையை பயன்படுத்தி, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு செல்ல வசதியான சாலைகள் உள்ளன.
இருந்தும், மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் சீமாவரம் பகுதியில் உள்ள டோல்கேட், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் கட்டணங்களை தவிர்க்க, கனரக வாகனங்கள் மீஞ்சூர் பஜார், மேட்டுப்பாளையம், வேண்பாக்கம், பொன்னேரி, தச்சூர் வழியாக செல்கின்றன.
போக்குவரத்து நெரிசல்
சில தினங்களாக, பொன்னேரி பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அதில் சிமென்ட் உருளைகள் பதிக்கப்படுகின்றன.
இப்பணிகளால், சாலைகளும் சேதம் அடைந்து, கனரக வாகனங்கள் சாலையோர பள்ளங்களில் சிக்கி போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் சென்றன.
மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் உத்தரவுபடி, பொன்னேரி சப் - கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில், வருவாய் மற்றும் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அதில், தச்சூர் - பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020 மற்றும் 2021ல் இரு முறை இதே போன்று, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
சில நாட்கள், போக்குவரத்து போலீசார் அங்கு பணியில் நின்று, வாகனங்களை திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுத்தனர்.
தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு இல்லாத நிலையில், தடையை மீறி வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்த முறையாவது, கனரக வாகனங்களுக்கான தடையை தொடர்ந்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
இது தொடர்பாக சப் - கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டு உள்ளதாவது:
பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி, தச்சூர் - பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் காலை, 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மேற்கண்ட நேரத்தில் கனரக வாகனங்கள் மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
மீஞ்சூர் - பொன்னேரி பகுதிகளுக்கு இடையே உள்ள கன்டெய்னர் கிடங்குகளுக்கு மட்டும் செல்லும் கனரக வாகனங்கள், மதியம் 12:00- மணி முதல் மாலை, 4:00 மணி வரை, மீஞ்சூர் முதல் கன்டெய்னர் யார்டு வரை பயணிக்கலாம். அதே நேரத்தில் பொன்னேரி நோக்கி பயணிக்கக்கூடாது.
இந்த விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்களுக்கு, மோட்டார் வாகன சட்டத்தின்படி 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகள் வரும் 28 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தொடர் கண்காணிப்பு இருக்கும்
தச்சூர் - பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நேரங்களில், விதிகளை மீறி பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, தச்சூர் கூட்டுச்சாலை, மீஞ்சூர் கூட்டுச்சாலை, பொன்னேரி- மீஞ்சூர் இடையே உள்ள கன்டெய்னர் கிடங்கு உள்ள பகுதியில் மூன்று இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தொடர்ந்து அங்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
-ஆர். ஐஸ்வர்யா, சப் - கலெக்டர், பொன்னேரி.