புதுடில்லி :குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடை அருகே, 'ட்ரோன்'களை பறக்கவிட்ட மூன்று இளைஞர்களை, போலீசார் கைது செய்தனர். பிரதமரை கொல்ல ஏதேனும் சதி வலை பின்னப்பட்டு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
குஜராத் சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பா.ஜ., தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இரண்டு நாட்களில் எட்டு பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார்.
நேற்று முன்தினம் மட்டும் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த நான்கு பொதுக்கூட்டங்களில் பிரதமர் பேசினார். இதையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அதிர்ச்சி
பொதுக் கூட்டம் நடக்கும் மேடையை சுற்றி 2 கி.மீ., துாரம் பரப்பளவுக்கு, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானம் பறக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பொதுக் கூட்ட மேடையை சுற்றிலும் மதியம் முதலே மக்கள் சாரை சாரையாக திரண்டனர். ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். உள்ளூர் குற்றப்பிரிவை சேர்ந்த கான்ஸ்டபிள் அனுப் சின்ஹ் பரத்சங் என்பவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, பொதுக்கூட்ட மைதானத்தில் மூன்று ட்ரோன்கள் பறப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு மற்றும் ட்ரோன் செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ட்ரோன்களை பறக்கவிட்டு கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டு ட்ரோன்களை கீழே இறக்கினர்.
உடனடியாக அந்த ட்ரோன்கள் அப்புறப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் வெடி பொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் போலீசார் நிம்மதி அடைந்தனர். கேமரா பொருத்தப்பட்ட அந்த மூன்று ட்ரோன்கள் வாயிலாக, கூட்டத்தினரை படம் பிடித்ததாக, அந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
விசாரணை
தடையை மீறி ட்ரோகளை பறக்கவிட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மூவரும் ஆமதாபாதைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெயர் நிகுல் ரமேஷ்பாய் பார்மர், 24, ராகேஷ் காலுபாய் பார்வாட், 35, ராஜேஷ்குமார் மங்கிலால் பிரஜாபதி, 20, என்ற விபரம் தெரியவந்துள்ளது.இவர்கள் மூவருக்கும் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புள்ளதா, பிரதமரை கொல்ல ஏதேனும் சதி வலை பின்னப்பட்டு அதற்கு இவர்கள் பயன்படுத்தப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும், இவர்களுக்கு வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பொதுக் கூட்ட மேடைக்கு பிரதமர் வந்து சேருவதற்கு முன்னரே ட்ரோன்கள் பறப்பதை போலீசார் கண்டுபிடித்து சமயோசிதமாக செயல்பட்டது, பாராட்டுகளை குவித்து வருகிறது.