புதுடில்லி, ''சீன விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்பது, எல்லையில் குவிக்கப்பட்டுள்ள நம் படை பலத்தின் வாயிலாகவே நன்கு வெளிப்படும்,'' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த, 'ஜி - 20' மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சீன அதிபர் ஷீ ஜிங்பிங்கை சந்தித்தபோது, அவருடன் கைகுலுக்கினார்.

இரு நாட்டுக்கும் இடையே எல்லை பிரச்னை இருந்துவரும் நிலையில், சீன அதிபருடன் நம் பிரதமர் கைகுலுக்கியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில், புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து பேசியதாவது:நம் அண்டை நாடான சீனாவுடன், நம் உறவு சுமுகமாக இல்லை. எல்லை தகராறு உட்பட கடந்த கால வரலாறு மோசமானதாகவே இருந்துள்ளது.
நாம் உறுதியாக இருக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக இருப்பதே சீனாவை கையாளுவதற்காக சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.
நம் நாட்டு நலனில் அவர்கள் அக்கறை காட்டாத போது, நம் படைகளை முன்னோக்கி நகர்த்துவதில் உறுதியாக இருப்போம்.
எப்போதும் இதே போல நடந்து கொள்ள முடியாது. எங்கெங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. இதைப் பின்பற்றி அங்கு கண்ணியத்துடன் நடந்து கொள்வதே சிறந்த தலைவரின் கடமை. சமீபத்தில் நடந்ததும் அதை போன்ற ஒரு சம்பவம் தான்.சீன விவகாரத்தில் பிரதமர் மோடி உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.
அவரது பேச்சில் மட்டுமின்றி செயலிலும் இது வெளிப்படுகிறது. கடந்த 2020 முதல் எல்லையில் பெரும் படைகளை குவித்து, அதை பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதை பிரதமர் மோடி திறம்பட செய்து வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.