வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நடிகையரிடம் மன்னிப்பு கேட்டு, 'இனி பெண்கள் குறித்து அவதுாறாக பேசமாட்டேன்' என, பிரமாண மனு தாக்கல் செய்ய, தி.மு.க., பேச்சாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் சென்னையில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில், தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக் பேசினார். அப்போது, குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகிய நடிகையர் குறித்து, அவதுாறான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், சைதை சாதிக் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், சைதை சாதிக் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கவுதம் மாரியப்பன் ஆஜரானார்.
![]()
|
இரு தரப்பு வாதகங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பெண்களை பற்றி அவதுாறான கருத்துகளை மனுதாரர் பேசி உள்ளார். இனிமேல், இதுபோல பேச மாட்டேன் என, அவர் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், சம்பந்தப்பட்ட நடிகையரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். விசாரணை வரும், 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை, போலீசார் சைதை சாதிக்கை கைது செய்யக்கூடாது.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.