பாட்னா: பீஹாரில், 5 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த நபருக்கு, ஐந்து முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி, கிராம பஞ்சாயத்தார் விதித்த தண்டனை, பயங்கர கண்டனங்களுடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
5 வயது
பீஹார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் சாக்லேட் தருவதாகக் கூறி, 5 வயது பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஊர் மக்கள் அவரை பிடித்து, பஞ்சாயத்து தலைவர் முன் நிறுத்தியுள்ளனர்.
ஆனால், பஞ்சாயத்தார், குற்றவாளிக்கு தண்டனையாக வெறுமனே ஐந்து முறை தோப்புக்கரணம் போடச் சொல்லியுள்ளனர். அவரும், ஐந்து முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.
![]()
|
இது குறித்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், ஆத்திரமடைந்த பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை, மாநில முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
நடவடிக்கை
இந்நிலையில், ''குற்றவாளி மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ''இச்சம்பவத்தை மூடி மறைக்க நினைத்தவர்கள் குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,'' என எஸ்.பி., கவுரவ் மங்களா தெரிவித்தார்.