சென்னை : தமிழகம், புதுச்சேரியில் டிச. 8ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாகவே பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: இந்த மாதம் 17 முதல் 23ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக பெய்துள்ளது. இந்த காலத்தில் இயல்பாக 34 மி.மி. பெய்ய வேண்டும்; ஆனால் 91 சதவீதம் குறைவாக 3 மி.மீ. மட்டுமே பெய்து உள்ளது.
மேலும் 16 மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை; 22 மாவட்டங்களில் இயல்பை விட மிகக் குறைவாக பெய்து உள்ளது. அக். 1 முதல் நவ. 23 வரையிலான காலத்தில் இயல்பாக 33 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும்; ஆனால் 4 சதவீதம் அதிகமாக 31.7 செ.மீ. பெய்துள்ளது.
![]()
|
கடந்த இரண்டு வாரங்களில் முதல் வாரத்தில் இயல்பை விட 17 சதவீதம் அதிகமாகவும்; அடுத்த வாரத்தில் இயல்பை விட 4 சதவீதம் குறைவாகவும் பெய்துள்ளது. இந்த மாதம் இயல்பை ஒட்டியே வெப்பநிலை பதிவாகி உள்ளது.
டிஜிட்டல் தரவுகள் சார்ந்த கணிப்பு அடிப்படையில் அடுத்து வரும் இரண்டு வாரங்களில் டிச. 8 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் இயல்பை விட குறைவாகவே பதிவாகும். நவ. 29ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.