சென்னை: தமிழகம் முழுதும், இன்று(26) மற்றும் நாளை(27), அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
தமிழகத்தில் இம்மாதம் 9ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, அனைத்து வேலை நாட்களிலும், ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கலாம்.
இது தவிர, www.nvsp.in; voterportal.eci.gov.in ஆகிய இணையதளங்கள் வழியாகவும், 'VOTER HELP LINE' 'மொபைல் ஆப்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர்கள் வசதிக்காக, கடந்த 12, 13ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இரண்டு நாள் முகாமில், 7.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும் விடுபட்டவர்களுக்காக, இன்று, நாளை என இரண்டு நாட்கள், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம்.
பட்டியலில் பெயர் உள்ளவர்கள், தங்கள் பெயருடன் இணைக்க, 'ஆதார்' எண்ணை அளிக்கலாம். இதற்கு படிவம் 'பி' வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.