ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் நடத்தப்படும் அமைதி பேரணி நிகழ்ச்சியில், பன்னீர்செல்வத்துடன் இணைந்து பங்கேற்பது குறித்து, தன் ஆதரவாளர்களுடன் சசிகலா, நேற்று ஆலோசனை நடத்தினார்.
மறைந்த ஜெயலலிதாவின் 6வது நினைவு தினம், டிச., 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, அவரது நினைவிடத்தில், கடந்த ஆண்டு நினைவு தினத்தன்று, பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து மரியாதை செலுத்தினர்.
இந்த ஆண்டு கட்சியில் பிளவு ஏற்பட்டு, பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்படுகிறார். அதனால், தனி அணியாக வந்து மரியாதை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என, பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார்.
அதே கருத்தை தான் சசிகலாவும் கூறி வருகிறார். இருவரும் ஒரே கோட்டில் பயணிப்பதால், இணைந்து செயல்படலாம் என, சசிகலாவிடம் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், பன்னீருடன் கைகோர்க்கலாம் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பாக, சென்னை தி.நகர் வீட்டில் ஆதரவாளர்களுடன் சசிகலா, நேற்று ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
- நமது நிருபர் -