சென்னை: 'ஆன்லைன்' சூதாட்டங்களை தடை செய்யும் சட்டம் தொடர்பாக கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பதில் அனுப்பப்பட்டது.
இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் கடந்த மாதம் 19ல் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. சட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் நேற்று முன்தினம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு நேற்று தமிழக அரசு சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதே பிரிவுகள் அடிப்படையில் சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து வந்த கடிதத்தில் கவர்னர் சில விளக்கங்கள் கேட்டிருந்தார்.
![]()
|
அதற்கு சட்டத் துறை சார்பில் 24 மணி நேரத்தில் விளக்கங்களை தயார் செய்து நேற்று காலை 11:00 மணிக்கு கவர்னர் மாளிகையில் அளிக்கப்பட்டது. சட்டம் விரைவில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அரசு ஆர்வத்துடன் செயல்படுகிறது. முந்தைய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. புதிய சட்டம் கொண்டு வர நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
எதற்காக அந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததோ அந்த காரணத்திற்கு விளக்கம் அளித்து புதிய ஷரத்துகளை உள்ளடக்கி புதிய சட்டம் கொண்டு வந்துள்ளோம். 'இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டுள்ளதா' என கவர்னர் கேட்டுள்ளார். இந்த சட்டம் எந்த வகையிலும் அரசியலமைப்பின் கூறுகளுக்கு எதிராக இல்லை.
அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட முன்வடிவு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளோம். அடுத்து 'ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளை வித்தியாசப்படுத்தவில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதை கருத்தில் வைத்து ஆன்லைன் சூதாட்டங்களை மட்டும் தடை செய்வதற்கான சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது.
நேரில் விளையாடும்போது யாருடன் எவ்வாறு விளையாடுகிறோம் என்பதை தெரிந்து விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் ஆன்லைனில் அந்த விளையாட்டை உருவாக்கியவர் எழுதும் செயல் திட்டம் அடிப்படையில் விளையாடுவதால் ஏமாற்றும் வாய்ப்புகள் மற்றும் பணத்தை சுரண்டும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அடிப்படையிலேயே சட்டம் இயற்றப்பட்டது.
இந்த விளக்கங்களை கவர்னர் ஏற்று சட்டத்திற்கு ஒப்புதல் தருவார் என எதிர்பார்க்கிறோம். அவசர சட்டம் அமலுக்கு வரவில்லை. இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என சட்டத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினேன். மத்திய சட்டத் துறை அமைச்சர் பரிசீலிப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
'கவர்னரை சந்திக்க நீங்கள் நேரம் கேட்டு தரவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்துள்ளாரே?' எனக் கேட்டதற்கு ''அது கவர்னருக்கு தான் வெளிச்சம்'' என அமைச்சர் ரகுபதி பதிலளித்தார்.