சென்னை: புதிய கல்வி கொள்கையில், 3, 5, 8ம் வகுப்புகளில் பொது தேர்வு இருப்பதாக கூறியது குறித்து, நம் நாளிதழின், டவுட் தனபாலு' பகுதியில் வெளியான செய்திக்கு, அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
தமிழக பல்கலை துணை வேந்தர்களின் ஆலோசனை கூட்டம், 23ம் தேதி என் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் பேட்டி அளித்தேன். 'பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பாடத்திட்டம் தரம் உயர்த்தப்பட்டு, உலக தரத்தில் சீரமைக்கப்படுகின்றன' என, தெரிவித்தேன்.
பின், கேள்விகளுக்கு பதில் அளித்தேன். அப்போது, 'தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை வந்தால், 3, 5, மற்றும் ௮ம் வகுப்புகளுக்கு கூட, பொது தேர்வு வந்து விடும். அந்த நிலை ஏற்படாமல் இருக்க, மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படுகிறது' என்று கூறினேன்.
இந்நிலையில், 24ம் தேதி வெளியான, 'தினமலர்' நாளிதழில், பக்கம் 8ல் 'டவுட் தனபாலு' எனும் பகுதியில், நான் தெரிவித்த கருத்து வெளியிடப்பட்டு, அதற்கு பதில் சொல்வதாக கூறப்பட்டுள்ளது. 'தேசிய கல்வி கொள்கையில், பொது தேர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு முன்னர் நீங்களே, புலி வருது கதையாக, படிக்கிற பசங்க மத்தியில் பீதியை கிளப்பணுமா என்ற டவுட் எழுதே' என்று கூறப்பட்டுள்ளது.
![]()
|
மத்திய அரசு வெளியிட்ட வரைவு தேசிய கல்வி கொள்கை -- 2019ம் ஆண்டு ஆவணம், பக்கம் 107, நான்காவது பத்தியில், 10 மற்றும், 12ம் வகுப்புடன் சேர்த்து, 3, 5 மற்றும் ௮ம் வகுப்பு மாணவர்களும் சென்சஸ்' தேர்வு எழுதுவர் என்று, பொது தேர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 65 பக்கம் கொண்ட தேசிய கல்வி கொள்கை - 2020 ஆவணத்தில், பக்கம் 18, நான்காவது பத்தியில், உரிய அதிகாரம் மிக்க அமைப்பு வாயிலாக, 3, 5, 8ம் வகுப்புகள் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், பொது தேர்வுகள் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய தேசிய கல்வி கொள்கை வந்தால், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு வந்து விடும் என்று, நான் கூறிய கருத்து உண்மைதான் என்பதையும், அது மத்திய அரசின் ஆவணங்களிலேயே உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இதன்படி, புதிய கல்வி கொள்கையில், பொது தேர்வு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று, 'தினமலர்' நாளிதழில் குறிப்பிட்டிருப்பதை திருத்தி, உண்மை தகவலை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.